ஜனதா தள மாநாடு தேவகவுடா கலந்து கொள்கிறார்
நெல்லையில் ஜனதா தள மாநாடு நடைபெறுகிறது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கலந்து கொள்கிறார்.
மத சார்பற்ற ஜனதா தள மாநில பொதுச் செயலாளர் ஜான் மோசஸ் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மத சார்பற்ற ஜனதா தள மண்டல மாநாடு நெல்லையில் வருகிற 30 ம் தேதி நடைபெறுகிறது. இதில் கட்சியின் அகில இந்திய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்து கொள்கிறார். மற்றும் தமிழ்நாடு ஜனதா தள தலைவர் இஸ்மாயில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்படுகிறது. பணவீக்கம், காஷ்மீர் பிரச்சினை, தீவிரவாதிகள் அச்சுறுத்தல், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மத்திய மாநில அரசுகள் வருகின்ற தேர்தலில் தோல்வியை தழுவும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் லிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.